இந்தியா

மும்பை பெண் கொலை வழக்கில் காவலாளி குற்றவாளி: செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்த பெண் வழக்கறிஞரை கொலை செய்த காவலாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விவரம்

ஐ.ஏ.எஸ். அதிகாரி அடானு புர்கயஸ்தாவின் மகள் பல்லவி (25). மும்பையின் வடாலா புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் வசித்த பல்லவி, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

அந்த கட்டிடத்தின் காவலாளி யாக காஷ்மீரைச் சேர்ந்த சஜ்ஜத் அகமது முகல் (22) இருந்தார்.

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கள்ளச்சாவி மூலம் பல்லவியின் வீட்டுக் கதவை திறந்து உள்ளே நுழைந்த சஜ்ஜத் அகமது, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அதைத் தடுக்க கடுமையாக போராடிய பல்லவியை கத்தியால் குத்தி சஜ்ஜத் கொலை செய்தார்.

சஜ்ஜத் அகமது மீது அத்துமீறி நுழைதல், பாலியல் பலாத்கார முயற்சி, கொலை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம், சஜ்ஜத் அகமது முகல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் அவரை குற்றவாளி என அறிவிப்பதாகவும் திங்கள்கிழமை தெரிவித்தது.

தண்டனை விவரம் எப்போது?

இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை வரும் 3-ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அப்போது குற்றவாளிக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து இருதரப்பு வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்தை எடுத்துரைக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT