குஜராத்தில் ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு விரைவில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், படேல் போராட்ட குழுவைச் சேர்ந்த நிர்வாகிகளான வருண் படேல் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
அவர்களில் ஒருவரான நரேந்திர படேல் அக்கட்சியில் இணைந்த சற்று நேரத்திற்கு பிறகு பேட்டியளித்தார். அப்போது, பாஜகவில் இணைவதற்காக தனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாக, அக்கட்சியினர் வாக்குறுதி அளித்ததாக பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாஜகவில் இணைவதற்காக எனக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறினர். முதல் கட்டமாக, 10 லட்சம் ரூபாய் கொடுத்தனர். பாஜகவில் சேருவதற்காக என்னை அழைத்துச் சென்ற படேல் போராட்ட குழுவின் மற்றொரு நிர்வாகி வருண் படேல் தான், இதை பேசி முடித்தார்.
பாஜக.,வின் சுயரூபத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான், அக்கட்சியில் இணைவதாக நாடகமாடினேன். பாஜகவின் பேரம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.