ஜெகதீஷ் ஷெட்டர் 
இந்தியா

கர்நாடக சட்ட மேலவை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டி

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகா சட்ட மேலவை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட 3 பேரை வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அக்கட்சி ‘சீட்’ வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதற்கு முந்தைய தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் ஹுப்ளி மத்திய தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் இத்தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைந்தார்.

முன்னதாக சட்டமேலவை உறுப்பினர்களாக இருந்த லட்சுமன் சவதி, ஆர்.சங்கர், பாபுராவ் சின்சூர் ஆகிய 3 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் காலியாக இருந்த 3 இடங்களுக்கும் வருகிற 30-ம் தேதி சட்டமேலவை இடைத்தேர்தல் ந‌டைபெறுகிறது.

இதில் காங்கிரஸ் சார்பில் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பனப்பாக மக்னூர், என்.எஸ். போஸராஜு ஆகிய 3 பேரும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இருப்பதால் இந்த 3 வேட்பாளர்களும் வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT