இந்தியா

டெல்லிக்கு சுற்றுலா வந்த அசாம் இளைஞர் தெருவில் சிறுநீர் கழித்ததால் தாக்கப்பட்டார்

ஹேமானி பந்தாரி

டெல்லியைச் சுற்றிப்பார்க்க வந்த 29 வயது அசாம் இளைஞர், தெருவில் சிறுநீர் கழித்ததால் கும்பல் ஒன்றால் சரமாரியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய தாக்கப்பட்ட அசாம் இளைஞர் சைமன் லால்முதிக், ''என்னுடைய சகோதரர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படிக்கிறார். அவரை சந்தித்துவிட்டு, ஊரைச் சுற்றிப் பார்க்க டெல்லி வந்தேன். இங்கே ரங்புரி சாலையில் வந்து கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் இங்கே சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று சிலர் கத்தினர். நான் மன்னிப்பு கேட்டேன். எனினும் அவர்கள் செங்கல்லால் என்னைத் தாக்கினர்.

குப்பைத் தொட்டி அருகே சிறுநீர் கழித்த என்னை 30 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதுகுறித்து என் சகோதரனிடம் சொன்னபோது அவர் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்தார்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உடல்நிலை சரியான உடனே ஊருக்குக் கிளம்ப உள்ளேன்'' என்றார்.

இதுகுறித்து அங்கு வசிப்பவரான 41 வயது பூப் சிங் கூறும்போது, ''சம்பவம் நடைபெறும்போது லால்முதிக் மற்றும் அவரின் நண்பர்கள் குடித்திருந்தனர்.

லால்முதிக் பலசரக்குக் கடைக்கு எதிராக சிறுநீர் கழித்தார். மேலே பால்கனியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர். அவர் இத்தனை வெளிப்படையாக செய்திருக்கக் கூடாது. நாங்கள் இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது என்று கூறினோம். ஆனால் இதைக் கேட்டு சண்டைக்கு வந்த அவர், எல்லோரையும் அடிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவரின் நண்பர்களும் சண்டையிடத் தொடங்கினர்'' என்று தெரிவித்தார்.

எனினும் இரு தரப்பிலும் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

          
SCROLL FOR NEXT