ஸ்ரீநகர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தவர் ஏ.எஸ்.துலத். உளவுத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். காஷ்மீர் நிலவரம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
காஷ்மீரில் தற்போது பிரிவினைவாதம் இல்லை. அது வேண்டாத ஒன்றாகிவிட்டது. 370வது சட்டப்பிரிவு போல, பிரிவினைவாதமும் மறைந்து விட்டது. அங்கு இயல்பு நிலை திரும்ப முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஹரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் உள்ளார். அவருக்கு காஷ்மீர் அரசியலில் பங்கு உள்ளது. அதனால் காஷ்மீர் விஷயம் குறித்து பேச, அவர் விரைவில் வீட்டுக் காவலில் இருந்து வெளியே வர அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவரது நிலைப்பாட்டை அறிய முடியும்.
காஷ்மீரில் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சிக்கு வந்தால், அது மத்திய அரசுக்கு நல்லதாக இருக்கும். இதற்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் தீர்வு. பிரிவினைவாதிகளுடன் பேச வேண்டாம் என்றால், முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான் அங்கு மாநில ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த முடியும்.
பாகிஸ்தானில் தற்போது நிலவும்நிலைமை, காஷ்மீரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களே, பாகிஸ்தானில் என்ன இருக்கிறது என இப்போது கூறுகிறார்கள். ஆனால், ஜம்மு காஷ்மீரை வீட்டு தீவிரவாதம் போகவில்லை என்பது அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. பூஞ்ச்-ரஜோரி ஆகிய பகுதிகளில் நடந்த மோசமான சம்பவங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காஷ்மீர் இளைஞர்கள் அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். அங்கு பதற்றமான சூழல் நிலவ வேண்டும் என யாரும் விரும்பவில்லை.
கடந்த 2005-ம் ஆண்டு பிடிபி கட்சி நிறுவனர் முப்தி முகமது சயீத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வராக தொடர, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு அனுமதிக்காதது மிகப் பெரிய தவறு. முப்தி முகமது சயீத் கடந்த 2002-ம் ஆண்டு முதல்வரானார். அவரது 3 ஆண்டு ஆட்சி மிக நன்றாக இருந்தது. அவரை அகற்றியது, காங்கிரஸ் கட்சி செய்த தவறு. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதுதான் அரசியல். இது குறித்து அதிகாரத்தில் இருக்கும் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.
காஷ்மீர் பேச்சுவார்த்தையின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என தெரியவில்லை. ஏனென்றால், மத்திய அரசிடமிருந்து நீண்ட காலத்துக்கு முன்பே விலகிவிட்டதால், அது பற்றி எனக்கு தெரியாது. காஷ்மீர் விஷயத்தை ஒவ்வொரு அரசும் தனது சொந்த வழியில் கையாள்கிறது.
நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் ஐந்தரை ஆண்டு காலம் பணியாற்றினேன். காஷ்மீர் மக்கள் வாஜ்பாயை இன்னும் நினைவுகூர்கின்றனர். அவருக்கு பின் வந்த டாக்டர் மன்மோகன் சிங்கும், தன்னால் முடிந்ததை செய்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், வரவேற்ற முதல் நபர் ஹரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக். பிரதமர் மோடியும் தனது பாணியில் செயல்படுகிறார். ஒவ்வொருவரும் தங்கள் வழியில் காஷ்மீர் விஷயத்தை கையாள்கின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வருவது நல்ல முன்னேற்றம். அதேபோல் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கும் பாகிஸ்தான் பிரதமர் வரவேண்டும். அவர் வருவார் என நினைக்கிறேன். இந்தியாவுடன் உறவை மேம்படுத்த பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதற்கு சாதகமாக இந்தியாவும் செயல்படவேண்டும். இதை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார் என நம்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதம் குறைந்து வருவதால், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சமீபத்தில் குப்வாரா அருகே 5 வெளிநாட்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மோசமான தாக்குதல் எல்லாம் வடக்கில் இருந்துதான் வருகிறது. அதுதான் தீவிரவாதிகள் வரும் பழைய வழி. இதை தடுத்து நிறுத்த நாம் பாகிஸ்தானுடன் பேச வேண்டும். காஷ்மீர் தீவிரவாதத்தில் தாலிபன் தலையீட்டுக்கு சாத்தியம் இல்லை. ஆப்கானிஸ்தானை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என தாலிபன் விரும்புவதால், அவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டார்கள்.
இவ்வாறு துலத் கூறினார்.