கபில் சிபல் 
இந்தியா

காங். தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு: கபில் சிபல் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வரும் 23-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. மாறாக அவர் நிலைநாட்ட விரும்பும் சித்தாந்தத்துக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான நோக்கம், அதைப் பிரதிபலிக்கும் வகையிலான செயல்பாடுகள், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய 3 பண்புகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT