இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய கனிம ஊட்டச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள இட்லி, தோசை ஆகிய தென்னிந்திய உணவுகள் பெரிதும் உதவுகின்றன என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவிலிருந்து இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய கனிமங்களை உடல் கிரகித்துக்கொள்வதில் அதிகளவிலான இந்தியர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது.
இந்தப் பிரச்சினை சைவ உணவுப் பழக்கம் உடையவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு தென்னிந்திய சைவ உணவுகள் வாயிலாகத் தீர்வு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்களின் ஆய்வுக் கட்டுரையில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, ''நாம் உட்கொள்ளும் உணவிலேயே போதுமான அளவு இரும்பு மற்றும் துத்தநாகம் இருந்தாலும், அவற்றை உடல் கிரகித்துக் கொள்ள உதவும் மினரல்கள் பற்றாக்குறையாகவே இருக்கின்றன. சைவ உணவுகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அதனாலேயே இரும்பு மற்றும் துத்தநாகத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் அளவு குறைவாக இருக்கிறது.
ஆய்வுகள், பழைய முறைகளைப் பயன்படுத்தி அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உருவாக்குவதை விட, கிடைக்கும் உணவுப் பொருட்களில் இருந்து மினரல்களை கிரகித்துக் கொள்ளும் முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவுகளில் இருந்து இரும்பு மற்றும் துத்தநாக உடல் கிரகிப்பதைக் குறைக்கும் பைடிக் அமில (phytic-acid content) பொருட்களைத் தவிர்க்கவோ குறைக்கவோ வேண்டும்.
இட்லி, தோசை, முளைகட்டிய பயிர்களை அதிகம் உட்கொள்ளும் தென்னிந்தியர்களின் உடல், இரும்பு மற்றும் துத்தநாகத்தை நல்ல முறையில் கிரகித்துக் கொள்கிறது. இதற்குக் காரணம் இத்தகைய உணவு வகைகளில் நொதித்தல், ஊறவைத்தல், முளைத்தல் ஆகிய செயல்முறைகள் நடைபெறுகின்றன.
இதன்மூலம் பைடேட்டுகள் குறைகின்றன. இரும்பு மற்றும் துத்தநாக கிரகிப்பைக் குறைக்கும் பைடேட்டுகளின் அளவு கொய்யா, நெல்லிக்காய், மீன், கறி ஆகியவற்றில் குறைவாக உள்ளதால் அவற்றை அதிகம் உட்கொள்ளலாம்'' என்று கூறப்பட்டுள்ளன.