குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (அக்.25) வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாச்சல பிரதேச மாநிலத்தில், நவம்பர் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என கடந்த 12-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 18-ம் தேதிக்குள், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், குஜராத் தேர்தல் தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறிய தேர்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.
தேர்தல் தேதியை அறிவிக்காமல் வாக்கு எண்ணிக்கை குறித்து மட்டும் அறிவித்திருப்பதால் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்பாக, நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க, பாஜக அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின.
'குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா' என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.