மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம் தங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, அவரின் குடும்பத்தினரின் பேஸ்புக் கணக்கை பின் தொடர்ந்து தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், முதலில் துபாயில் இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் பாகிஸ்தானில் தங்கியிருக்கலாம் என்று இந்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.
இந்நிலையில், தாவூத்தின் குடும்பத்தினர் சிலர் பேஸ்புக் இணையதளத்தில் இணைந்துள்ளதாகவும், தங்கள் குடும்ப உறுப் பினர்கள் குறித்த தகவல்களை அதில் வெளியிட்டு வருவதாகவும் தெரியவந்தது.
குறிப்பாக தாவூதின் மகள் மெஹ்ரூக், மருமகன் ஜுனைத் மியான்தத் உள்ளிட்டோர் பேஸ்புக்கில் கணக்கை தொடங்கி தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். ஜுனைத், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகன் ஆவார்.
இந்த இருவரையும் தவிர, தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் சிலர் புனைப் பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்கள் அனைவரது கருத்துப் பரிமாற்றங்களையும் இந்திய உளவுத்துறை அமைப்புகள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றன.
தொடக்கத்தில் மெஹ்ரூபும், அவரது கணவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவல் களையும், படங்களையும் அதிக அளவில் வெளியிட்டு வந்தனர்.
2010-ம் ஆண்டு ஜூன் மாதம் பேஸ்புக்கில் மெஹ்ரூக் வெளியிட்ட செய்தியில், “கராச்சியில் எனது அப்பா, அம்மா, கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது என்னுடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார். இதன் மூலம், கராச்சியில் இருந்த தாவூத், வேறொரு நகருக்கு குடும்பத்தினருடன் 2010-ம் ஆண்டு சென்று வந்துள்ளது தெரிகிறது.
தொடர்ந்து தாவூத் குடும்பத்தி னர் பற்றிய தகவல்கள், படங்கள் வெளியிடப்பட்டதால், அவை பெரிய அளவில் கவனம் பெற்றது. இதையடுத்து பேஸ்புக்கிலிருந்து இருவரும் வெளியேறினர். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஜுனைத்தும், அதைத் தொடர்ந்து மெஹ்ரூகும் பேஸ்புக் கில் இணைந்தனர்.
இப்போது இவர்களின் பேஸ்புக் கணக்குகளை பின்தொடர் வதன் மூலம், தாவூத் பற்றி மேலும் சில தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று இந்திய உளவுத்துறையினர் கருதுகின்றனர்.
தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசினா பார்கர் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க தாவூத் குடும்பத்தினர் சிலர் வரக்கூடும் என்று உளவுத்துறையினர் கருதினர்.
ஆனால், அது தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பேஸ்புக் இணையதளத்தின் வாயிலாக தாவூத்தின் குடும்பத்தி னரை கண்காணிக்கும் பணியை உளவுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.