இந்தியா

குஜராத் தேர்தல் தேதி சர்ச்சை: ப.சிதம்பரத்துக்கு எச்.ராஜா பதில்

செய்திப்பிரிவு

"குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் அதிகாரத்தை, பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது" என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்த நிலையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு பதிலளித்துள்ளார்.

எச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு அளித்திருந்தால் இந்நேரம் தேதி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? உங்கள் அறியாமையை வெளிப்படுத்தாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது:

குஜராத்தில் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, பிரதமர் மோடி மேற்கொள்ளும்போது, அந்த மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கும் அதிகாரத்தை மோடிக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது. மேலும், குஜராத் மாநிலத்துக்கு சலுகைகள், இலவசத் திட்டங்கள் அறிவித்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும்.

அதன்பின்னர், தற்போது விடுமுறை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்குப் பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT