2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சாட்சியாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா தன்னை சாட்சியாகவும் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு நீதிபதி ஓ.பி.சைனி அனுமதி அளித்திருந்தார்.
இதன்படி, ஆ.ராசா எதிர்த்தரப்பு சாட்சியாக ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அதன் விவரம்: நான் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பதவி வகித்துள்ளேன். கடந்த 2007-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, 51 நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு அலைவரிசை உரிமம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை வந்தபின், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது 575 விண்ணப்பங்கள் வந்தன. இதுவரை தொலைத்தொடர்புத்துறை வரலாற்றில் இல்லாத வகையில், அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால், ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய சட்டத்துறை அமைச்சகத்தின் கருத்து கேட்கப்பட்டது.
சட்டத்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரை நடைமுறைக்கு சாத்தியமாக இல்லாததால், அதிகாரிகள் அளவில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து (அப்போதைய) பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வீடு, அலுவலகத்தில் சந்தித்து விளக்கினேன். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார். அவரையும் சந்தித்து விளக்கம் அளித்தேன். சட்டத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜுக்கும் ஒதுக்கீடு முறை குறித்து விளக்கம் அளித்தேன். இவ்வாறு சாட்சியம் பதிவு செய்தார். அப்போது உடல்நிலை சரியில்லை என்று ஆ.ராசா கூறியதால், சாட்சியம் பதிவு நிறுத்தப்பட்டது. புதன்கிழமை ராசா ஆஜராகி, தொடர்ந்து சாட்சியத்தை பதிவு செய்ய உள்ளார்.