குறியீட்டுப் படம் 
இந்தியா

விதிமீறலால் ரூ.22 கோடி இழப்பு: பிஎஸ்என்எல் அதிகாரிகள் தொடர்புடைய 25 இடங்களில் சிபிஐ சோதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் உட்பட 21 அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ 25 இடங்களில் சோதனை நடத்தியது.

அசாம் பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர், துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது சிபிஐ. இதன் தொடர்ச்சியாக 25 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட சிபிஐ செய்தித் தொடர்பாளர், "தேசிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கேபிள் பதிப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.90,000 திறந்தவெளி முறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி ஒப்பந்ததாரர் தரப்பில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.30 லட்சம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள தளர்வு விதிகளைப் பயன்படுத்தி விதி மீறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் ரூ.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அசாம், பிஹார், மேற்கு வங்கம், ஒடிசா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலுவலகங்கள், வீடுகள் உள்பட 25 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

SCROLL FOR NEXT