காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, மாநிலங்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று (புதன்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தினால் இரு நாடுகளுடனான இந்தியா நல்லுறவு பாதிக்கப்படும் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்துவருகிறது. நேற்று (செவ்வாய்கிழமை) மக்களவையில் இவ்விவகாரம் எதிரொலித்தது.
இத்தகைய சூழலில், இன்று மாநிலங்களவை அலுவல் குறிப்பில், காஸா தாக்குதல் மீதான விவாதம் பூஜ்ய நேரத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அவையில் கூடியிருந்தனர். ஆனால், அவை கூடியபோது காஸா தாக்குதல் மீதான விவாதத்தை அனுமதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இத்தகைய விவாதத்தின் மூலம் இஸ்ரேல், பாலஸ்தீனத்துடனான நட்புறவு பாதிக்கப்படும் என்றார். மேலும் இன்று காலை நாடாளுமன்ற அலுவல் பட்டியலை பார்த்தபோதே, காஸா தாக்குதல் மீதான விவாதம் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தான் கவனித்ததாகவும், மாநிலங்களவை தலைவருக்கு மரியாதை அளிக்கும் வகையிலேயே அவைக்கு வந்திருப்பதாகவும் கூறினார். தன்னிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் அலுவல் குறிப்பில், காஸா தாக்குதல் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுஷ்மா கூறினார்.
அவைத் தலைவருக்கு கடிதம்:
இஸ்ரேல்-காஸா பிரச்சனையை விவாததிற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரிக்கு சுஷ்மா சுவராஜ் கடிதம் எழுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: "காஸா சர்ச்சை பொறுத்தவரை அவைத் தலைவர் முடிவுக்காக காத்திருப்போம். அவைத் தலைவர் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம்" என கூறியிருந்தார்.
ஒத்திவைப்பு
சுஷ்மா ஸ்வராஜ் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உணவு இடைவேளைக்கு முன்னர் இரண்டு முறையும் அதன் பின்னர் பிற்பகல் 3 மணி வரையும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.