இந்தியா

சுங்கச் சாவடி ஊழியர் மீது தாக்குதல்: கன்னட அமைப்பினரை கைது செய்ய போலீஸார் தயக்கம்

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட சுங்கச் சாவடியில் கட்டணம் கேட்ட ஊழியரையும் சுங்கச்சாவடியையும் கன்னட அமைப்பை சேர்ந்த 4 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் தொடர்புடைய கன்னட அமைப்பினரை போலீஸார் இதுவரை கைது செய்யாததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை சித்ர துர்கா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் காரில் கடந்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் ரூ. 30 கட்டணத்தை செலுத்துமாறு ஊழியர் ரமேஷ் குமார் கேட்டுள்ளார்.

கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பணம் செலுத்த மறுத்ததால் சுங்கச்சாவடி ஊழியர் களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக் கிறது. இதில் ஆத்திரமடைந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் 4 பேர் சேர்ந்து ரமேஷ்குமாரை கடுமை யாகத் தாக்கியுள்ளனர். மேலும் சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்த கணினிகளையும் கண்ணாடி கதவுகளையும் உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பாக கடந்த புதன்கிழமை சித்ரதுர்கா நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநிலத் தலைவர் கிருஷ்ண பைரே ரெட்டி, நாராயண ராஜு உள்ளிட்ட 4 பேர் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சுங்கச்சாவடி ஊழியர் மீது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் கன்னட சேனல்களில் வியாழக்கிழமை ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் சுங்கச்சாவடி ஊழியரை மிரட்டியுள்ளது பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினரை கைது செய்ய சித்ரதுர்கா போலீஸார் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT