டெல்லி சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் திங்கள்கிழமை இரவு கட்சியின் தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினர். டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸின் எட்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் 28 உறுப்பினர்கள் கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது.
முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்றார். 49 நாள் ஆட்சிக்குப் பின் ஜன்லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த முடியவில்லை என்ற காரணத்தினால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகிறது. இந்நிலையில் முதன்முறையாக பாஜகவின் 29 எம்.எல்.ஏக்கள் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இது குறித்து தி இந்துவிடம் பாஜக எம்.எல்.ஏக்கள் வட்டாரங்கள் கூறியதாவது: ‘குடியரசுத் தலைவர் ஆட்சியினால் டெல்லியின் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளன. டெல்லிவாசிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கையில் எடுத்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடுகிறது. இதனால் கடந்த ஆட்சியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் கெட்ட பெயர் பாஜகவுக்குதான் என வருந்துகின்றனர்.
இதை உள்துறை அமைச்சரிடம் எடுத்து கூறியதுடன் தேர்தல் நடத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என பாஜக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவின் எம்.எல்.ஏக்கள் சிலர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகி விட்டதால் அதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே ஆட்சி அமைக்க தேவையான 33 உறுப்பினர்களை காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மியை உடைத்து அதிலிருந்து இழுக்கும் முயற்சியை பாஜக செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.