இந்தியா

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டப்பட்டது: விடைபெறும் ராணுவ தளபதி விக்ரம் சிங்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டதாக விடைபெறும் ராணுவ தளபதி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையொட்டி, விடைபெறுவதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார் விக்ரம் சிங்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்: "2013-ல் இந்திய வீரர் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்ததற்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டது.

ராணுவம் எப்போதும் ஆயுத தாக்குதல் மட்டும் நடத்துவதில்லை. சில நேரங்களில் கொள்கை முடிவுகள், சாதுர்யமான செயல்களாலும் தாக்குதலில் ஈடுபடுகின்றன. பாகிஸ்தான் தாக்குதலுக்கு சாதுர்யமாக தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்கு ராணுவ தளபதி உதவி தேவைப்படவில்லை. ஒரு கமாண்டரே இதனை செய்து முடித்துவிட்டார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியா - சீனா உறவை பொறுத்தவரை எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தால் அச்சுறுத்தல் இல்லை. ஆனால், வழக்கம் போல் பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட கூடும் என்றார்.

2013-ல் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஹேம்ராஜ் தலை துண்டித்து கொல்லப்பட்டார், அவருடன் கொல்லப்பட்ட மற்றொரு வீரர் சுதாகர் சிங் உடல் துண்டாடப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது ராணுவ தளபதியாக இருந்த விக்ரம் சிங், இந்திய ராணுவம் தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் சரியான பதிலடி கொடுக்கும் என கூறியிருந்தார். சம்பவம் நடந்து 6 நாட்களுக்குப் பிறகு அவர் பதிலளித்தது சர்ச்சைக்குள்ளானது என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT