சென்னை: சென்னையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (சுற்றுலா பிரிவு) பொதுமேலாளர் கே.ரவிகுமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஐஆர்சிடிசி சார்பில், 500-க்கும்மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறோம்.
தற்போது, பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா திட்டங்களை வழங்கி வருகிறோம். பாரத் கவுரவ் சுற்றுலா திட்டத்தின் கீழ், இதுவரை 2 சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம்.
தற்போது, 3-வது சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி(கட்ரா) அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள். சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும். 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 8 பெட்டிகள், 3 குளிர்சாதன பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் கொண்டது.
12 நாட்கள் பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.22,350. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9003140680/682 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கல்வி சுற்றுலாவுக்காக பள்ளி, கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாரத் கவுரவ்திட்டத்தில், சுற்றுலா ரயில் இயக்கத்தில் தனியாருடன் போட்டியிடும் சூழல் தான் இருக்கிறது. மற்றமண்டலங்களை விட தென் மண்டலத்தில் போட்டி கடுமையாகவே இருக்கிறது என்றார்.