மும்பை: பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து இந்தியா, ரஃபேல் போர் விமானங்களை வாங்கியது. ‘‘இதில் ஊழல் நடந்துள்ளது என்று பிரதமர் மோடி அரசு மீது ராகுல் காந்தி கடந்த 2018-ல் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து மும்பை யைச் சேர்ந்த பாஜக தொண்டர் மகேஷ் ஷிரிஷிரிமல் என்பவர், ராகுல் காந்தி மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி, நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தின் சம்மனை எதிர்த்து,மும்பை உயர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு நவம்பரில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கூறும்வரை மாஜிஸ்திரேட் நீதி மன்றம் விசாரணை நடத்த வேண்டாம் என்றும், அதுவரை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு, மும்பை உயர் நீதி மன்ற தனி நீதிபதி எஸ்.வி. கொத்வால் முன்னிலையில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை நீதிபதிஎஸ்.வி. கொத்வால் ஒத்திவைத்தார். மேலும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.