முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை இயற்கையானது என அறிக்கை தருமாறு தன்னை சிலர் வற்புறுத்தியதாக பிரேதப் பரிசோதனையை நிகழ்த்திய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தருமாறு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நிர்வாகத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார்.
சுனந்தாவின் பிரேதப் பரிசோதனையை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் தடய அறிவியல் துறைத் தலைவர் சுதிர் குப்தா தலைமை யிலான குழுவினர் மேற்கொண் டனர். இவர், கடந்த செவ்வாய்க் கிழமை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும் பநலத்துறை அமைச்சகத்துக்கு புகார் கடிதம் எழுதினார்.
அதில், சுனந்தாவின் மரணம் இயற்கையானது என அறிக்கை அளிக்கும்படி தன்னை எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த உள்நோக்கம் கொண்ட சிலர் வற்புறுத்தினர் என்றும், அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.உண்மை யான அறிக்கையை அளித்ததால், இப்போது தன்னை துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் வகையில் வேறொருவருக்கு பதவி உயர்வு வழங்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் சுதிர் குப்தா குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு ஆதாரமாக தமக்கு வந்த சில மின்னஞ்சல்களையும், புகார் கடிதத்துடன் இணைத்து அளித்துள்ளார்.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டாக்டர் சுதிர் குப்தா அளித்த புகார் தொடர்பாகவும், சுனந்தாவின் பிரேதப் பரிசோதனை தொடர்பாகவும் முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் எம்.சி.மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். முழுமையான விசாரணை நடத்திய பின்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
டாக்டர் சுதிர் குப்தாவின் இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சுனந்தா புஷ்கர் மரணத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக டெல்லி போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி கூறும்போது, “பிரேதப் பரிசோதனை நடத்திய டாக்டர் சுதிர் குப்தா உள்ளிட்ட குழுவினரிடமும், தேவைப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரிடமும் விசாரணை நடத்துவோம்” என்றார்.
இது குறித்து சசிதரூர் மற்றும் சுனந்தாவின் நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, “எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விரோதங்களுக்கு சுனந்தாவின் மரணத்தை பிரச்சினையாக்க முயல்கின்றனர்” என்று குற்றம் சாட்டினர்.
டெல்லியின் ஐந்து நட்சத்திர ஓட்டல் ‘தி லீலா பேலசில்’ தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் (52), கடந்த ஜனவரி 17-ம் தேதி இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை, அவரது கணவர் சசிதரூர் இரவு சுமார் 8.30 மணிக்கு பார்த்து விட்டு டெல்லி போலீஸாருக்கு தகவல் அளித்தார். சுனந்தா இறந்ததற்கு இருநாள் முன்னதாக சசிதரூருக்கும் பாகிஸ்தானிய பத்திரிகையாளரான மெஹர் தரார் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
பின்னர், சில முக்கிய உண்மைகளை பத்திரிகை யாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் வெளியிடப்போவதாக சுனந்தா புஷ்கர், தனது நண்பர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். அத்தகைய சூழ்நிலையில் அவர் மரணம் அடைந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.