இந்தியா

இராக்கில் சிக்கிய செவிலியர்களை மீட்க விரைவு நடவடிக்கை: சுஷ்மாவிடம் கேரள முதல்வர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இராக்கில் சிக்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த 46 செவிலியர்களை பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேரில் வலியுறுத்தினார்.

இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. உள்நாட்டுப் போரில் அரசின் உடமைகள், முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

தீவிர மோதல் நடந்துவரும் திக்ரித் நகரில் மருத்துவமனையினுள் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள இந்திய செவிலியர்களை மீட்க, இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய நிலையில், கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் பிணைய கைதிகளாக வைத்துள்ள இந்திய செவிலியர்களை, தாங்கள் கைப்பற்றியுள்ள மொசூல் நகரத்துக்கும் கடத்திச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி, இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார்.

இராக்கில் சிக்கியிருக்கும் கேரள செவிலியர்கள் 46 பேரை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உம்மன் சாண்டி, சுஷ்மா ஸ்வராஜிடம் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "இராக்கில் தற்போது நிலவும் சூழல் நமது செவிலியர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான உகந்த தருணமாக இல்லை. அங்கு நிலவும் நிலைமை சற்று தணிந்தால் மட்டுமே, மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

திக்ரித் நகரில் செவிலியர்கள் இருக்கும் மருத்துவமனைக்கு அருகே உள்ள பகுதியில் தாக்குதல் நடந்து வருவதால், செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தின் கீழ் தளத்தில் தற்போது தங்கி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புகாக இருப்பதாக வெளியுறவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம், சுஷ்மா ஸ்வராஜ் விளக்கியுள்ளார்" என்று அவர் கூறினார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT