இந்தியா

திருவண்ணாமலையைச் சேர்ந்த 2 பெண்கள் பெங்களூருவில் லாரி மோதி பலி: தீபாவளி முடிந்து திரும்புகையில் நேர்ந்த விபத்து

இரா.வினோத்

திருவண்ணாமலையைச் சேர்ந்த இரு பெண்கள் பெங்களூருவில் லாரி மோதி ஏற்பட்ட‌ விபத்தில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தீபாவளியைக் கொண்டாடிவிட்டு திரும்புகையில் தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வெள்ளச்சி (70), இவரது மகள் வசந்தா (49) ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள பானஸ்வாடியில் வசித்தனர். கூலித் தொழிலாளிகளான இருவரும் கடந்த வாரம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குச் சென்றனர். தீபாவளியைக் கொண்டாடிவிட்டு நேற்று காலை பெங்களூரு திரும்பினர். பானஸ்வாடியில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையைக் கடக்கும்போது வேகமாக வந்த லாரி, இருவர் மீதும் மோதியது. இதில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பானஸ்வாடி போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மகாராஷ்டிர பதிவெண் கொண்ட லாரி, வெள்ளச்சி, வசந்தா ஆகியோர் மீது மோதியது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தீபாவளி கொண்டாடிவிட்டு திரும்புகையில் தாயும் மகளும் உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT