இந்தியா

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை - முன்னாள் பிரதமர் தேவ கவுடா தகவல்

இரா.வினோத்

பெங்களூரு: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பெங்களூருவில் நேற்று, முன்னாள் பிரதமரும் மஜத தேசியத் தலைவருமான‌ தேவ கவுடாவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் உள்ளிட்டோரும் உடன் இருந்தன‌ர். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேவ கவுடா கூறியதாவது: க‌ர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கு எதிராக மஜத போராடி வருகிற‌து. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட‌ இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தோம். ஆனால் மக்களவைத் தேர்தலில் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அது முற்றிலும் தவறான செய்தி.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜகவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி வைத்துள்ளன. மக்களவைத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுப்போம். எங்களுக்கு வரும் கூட்டணி அழைப்புகளை புறந்தள்ள மாட்டோம். ஃபரூக் அப்துல்லா உடன் காஷ்மீர் அரசியல் குறித்தே பேசினேன். இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT