இந்தியா

சமூக வலைதள பதிவால் விளைந்த கலவரம்: மகாராஷ்டிராவின் கோலாபூரில் போலீஸ் குவிப்பு

செய்திப்பிரிவு

கோலாபூர்: சமூக வலைதளங்களில் சிலர் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பை போற்றிப் புகழ்ந்தும், மராட்டிய மன்னரை குறைத்துப் பேசியும் சில பதிவுகளைப் பகிர்ந்தது, மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பெரும் கலவரத்துக்கு வித்திட்டுள்ளது.

குறிப்பிட்ட இருவரின் அந்த சமூக வலைதள பதிவிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் இன்று (புதன்கிழமை) காலை வலதுசாரி அமைப்பினர் பந்த் அறிவித்தனர். ஆனால், அமைதியான பந்த்துக்கு மாறாக வெகு சில நிமிடங்களிலேயே அங்கே கலவரம் மூண்டது. சிவாஜி மகாராஜ் சவுக் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இரண்டு நபர்களை சுட்டிக்காட்டி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது களத்தில் இருந்த நபர் ஒருவர் பேசுகையில், "மராட்டிய மண்ணில் முகலாய மன்னர்களை மகிமைப்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் இந்து சமூகத்தைக் காக்க இப்போதே வாள் எடுக்க தயாராக இருக்கிறோம். இனியும் பொறுப்பதற்கில்லை" என்று ஆவேசமாகக் கூறினார்.

அப்போது சிலர் அருகிலிருந்த கடைவீதிக்குள் புகுந்து கடைகளை சூறையாடினர். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெரும் படையுடன் போலீஸார் அங்கு குவிந்தனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு எனப் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி போராட்டத்தைக் கட்டுப்படுத்தி வன்முறையாளர்கள் சிலரை கைதும் செய்தனர்.

அப்போது சில போராட்டக்காரர்கள், "இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. லவ் ஜிகாத் நடக்கிறது. அதற்கு தி கேரளா ஸ்டோரி ஓர் உதாரணம்" என்றனர்.

இந்த வன்முறை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "இந்த அரசாங்கம் சட்டம் - ஒழுங்கை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். சர்ச்சை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விஷமிகள் மீது நடவடிக்கை நிச்சயம்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT