அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள பிபர்ஜாய் புயல் மேலும் வலுப்பெற்று வரும் நிலையில், மும்பை பத்வார் பார்க் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்பிடி படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். 
இந்தியா

அரபிக் கடலில் தீவிரப் புயலாக வலுவடைந்தது ‘பிபர்ஜாய்’ - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், தீவிரப் புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ‘பிபர்ஜாய்’ என்பதற்கு வங்க மொழியில் ‘பேரழிவு’ என்று பொருள்.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று காலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்நிலையில், அந்தப் புயல் தற்போது மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறியுள்ளது. இது, தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது, மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறும் என்றும், தென்மேற்கு பருவமழை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த 12 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் தீவிரமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் புயலானது அரபிக் கடலுக்கு மத்திய கிழக்கு, தென் கிழக்குப் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பிபர்ஜாய் காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிகத் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்" என்று தெரிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு பாதிப்பு இருக்கும்? - பிபர்ஜாய் புயலால் நாளை (ஜூன் 8) முதல் வரும் 10-ஆம் தேதி கொங்கன் - கோவா - மகாராஷ்டிரா மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 135 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கனமழைக்கும் வாய்ப்பிருக்கிறது என்றும், ஜூன் 10-ஆம் தேதி மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை மீது தாக்கம்: இந்தப் புயலானது பருவமழை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் மேற்கு பருவமழை தாமதமடைந்துள்ள நிலையில், பிபர்ஜாய் புயலால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை இது மேலும் தள்ளிப்போடலாம் என்று கணிக்கின்றனர். கேரளாவில் பருவமழை தாமதமாகவே தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று (ஜூன் 7) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | முழு விவரம்: வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

SCROLL FOR NEXT