புதுடெல்லி: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பின் பேரில், மல்யுத்த வீராங்கனைகள் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஞ்சரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பின்னர், தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாகக் கூறி ஹரித்துவார் சென்றனர். விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மாற்றிக் கொண்டு, மத்திய அரசுக்கு 5 நாள் கெடு விதித்தனர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் வழக்கம்போல் தங்களது அரசுப் பணிக்குச் சென்றதால், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டதாக செய்தி வெளியாகியது. எனினும், அதனை மறுத்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்வதாக அறிவித்தனர். இதன்பிறகு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் சென்றுள்ளனர். விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தும் உடன் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மாலிக், "அரசு எங்களிடம் என்ன கூறுகிறதோ அது குறித்து மூத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசிப்போம். அரசின் திட்டம் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே சம்மதத்தை தெரிவிப்போம்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.