இந்தியா

சிவபெருமான் பழங்குடியினத்தவர் - ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏ விளக்கம்

செய்திப்பிரிவு

போபால்: சிவபெருமான் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜூன் சிங் ககோடியா தெரிவித்துள்ளார்.

சியோனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பர்காட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ககோடியா மேலும் பேசியதாவது: கடைதலின்போது வெளிப்பட்ட அமிர்தத்தை புத்திசாலிகள் குடித்துவிட்டு, விஷத்தை விட்டுவிட்டார்கள். அந்த விஷத்தை என்ன செய்வது? யார் குடித்தது? இமயமலையில் வசிக்கும் போலே பண்டாரிதான் (சிவபெருமான்) அந்த விஷத்தைக் குடித்தார்.

பழங்குடியினர் போலே பண்டாரி என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்த சிவன் விஷத்தை தான் குடித்து இந்த உலகுக்கு உயிர்கொடுத்தார்.

எனவே, நமது சமூகம் மிகவும் பெருமை வாய்ந்தது. இந்த மக்கள் அனைவரும் நம்மில் இருந்து வந்தவர்கள். அதனால்தான் அனைவரையும் மதிக்கிறோம். இவ்வாறு அர்ஜூன் சிங் ககோடியா பேசினார்.

பஜ்ரங்பலி அல்லது ஹனுமன் ஒரு பழங்குடியின வனவாசி, அவர்தான் ராமரை பாதுகாத்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தார் என கடந்த மாதம் அர்ஜூன் சிங் தெரிவித்த நிலையில், தற்போது சிவபெருமானையும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT