இந்தியா

பாஜகவில் சேர ரூ.1 கோடி பேர விவகாரம்: நீதி விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பாஜகவில் சேர ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக, படேல் சமூகப் போராட்டக் குழுவைச் சேர்ந்த நரேந்திர படேல் கூறியுள்ள புகார் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் முக்கிய தேர்தல் பிரச்சினையாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், படேல் போராட்டக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகளான வருண் படேல் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.  படேல் போராட்டக்குழுவைச் சேர்ந்த,  நரேந்திர படேல் பாஜகவில் சேர, தனக்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், 10 லட்சம் ரூபாய் முன் பணம் தரப்பட்டதாகவும் புகார் கூறினார். இந்த விவகாரம் பாஜகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நரேந்திர படேலின் புகார் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி  "நரேந்திர படேல் கூறியுள்ள புகார் மிக முக்கியமானது. தனக்கு எதிரான கட்சிகளையும், அமைப்புகளையும் பிளவு படுத்தி ஆதாயம் தேடும் பாஜகவின் திட்டம் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT