இம்பால்: மணிப்பூர் மாநிலம் செரோ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், கலகக்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்ஏஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். அசாம் ரைஃபிள் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மணிப்பூர் மாநிலம், சுக்னோ மற்றும் செரோ பகுதியில் அசாம் ரைபிள் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் போலீசார் இணைந்து பரந்த அளவிலான தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில், ஜூன் 5 - 6 இரவில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் கலகக்கார குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சண்டையில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு அசாம் ரைஃபிள் படைவீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் விமானம் மூலமாக சிகிச்சைக்காக மந்திரிபுக்ரி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் மலைகள், பள்ளத்தாக்கு பகுதிகளில், அசாம் ரைஃபிள் படை, மத்திய ஆயுதப் படை மற்றும் போலீசாருடன் இணைந்து இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3-ம் தேதி நடந்த பேரணியில் வன்முறை ஏற்றபட்டது. இந்த வன்முறை காரணமாக 80 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வன்முறை பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவரின் வழிகாட்டுதலின்படி, மணிப்பூரில் அமைதி நிலவுவதற்காக, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் அதனை அரசிடம் ஒப்படைக்கும்படியும், தவறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.