கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவின் சேவைத் துறையில் 13 ஆண்டுகளில் 2-வது வலுவான வளர்ச்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி 13 ஆண்டுகளில் இரண்டாவது வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கு, தேவையில் ஏற்பட்ட சாதகமான நிலை மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தது முக்கிய காரணங்களாக அமைந்தன.

எஸ்&பி குளோபல் இந்தியா சர்வீசஸ் மதிப்பீட்டின்படி பிஎம்ஐ பிசினஸ் ஆக்டிவிட்டி குறியீடு ஏப்ரல் மாதத்தில் 62 ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 61.2 ஆக குறைந்தது. இந்திய சேவை துறையின் வளர்ச்சி ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் குறைந்திருந்தாலும் 2010 ஜூலை மாதத்துக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 22-வது மாதமாக சேவை துறை குறியீடு 50-க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குறியீடு 50-க்கு கீழ் இருந்தால் பின்னடைவாகவும், அதிகமாக இருந்தால் முன்னேற்றமாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

சேவை துறை மே மாதத்தில் மீள்தன்மை உடையதாக மாறியுள்ளது. புதிய பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான பணியாளர்களை சேவை துறை கணிசமாக அதிகரித்துக் கொண்டுள்ளது. மேலும், வரவிருக்கும் 12 மாதங்களில் இந்த துறையின் வணிக செயல்பாடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸின் பொருளாதார இணை இயக்குநர் பொலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT