புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்தது என்றும் ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திரித்துக் கூறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பி கே ஜெனா பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: விபத்து நிகழ்ந்ததில் இருந்து ஊடகத்தினர் அங்கு இருக்கின்றனர். அனைத்து நடவடிக்கைகளும் காமிரா முன்னாலேயே நடந்து கொண்டிருக்கிறது
ரயில்வே நிர்வாகம், இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தாக தெரிவித்தது. அதனால் நாங்களும் அறிவித்தோம். ஆனாலும் எங்களின் பாலாசோர் மாவட்டட ஆட்சியரும் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 275 பேர் உயிரிழந்து இழந்திருந்தனர்.
சில நேரங்களில் ஒரே உடலை இரண்டு முறை எண்ணியிருக்கலாம் அதனால் எண்ணிக்கை மாறியிருக்கலாம். மீட்புப்பணிகளும், மறுசீரமைப்பு பணிகளும் பொதுமக்களின் முன்னிலையிலேயே நடந்து வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் எங்கள் அரசுக்கு இல்லை. ஒடிசா அரசு வெளிப்படைத்தன்மை மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.
இந்த 275 உடல்களில் இதுவரை 108 உடல்களே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற உடல்களும் அடையாளம் காணப்பட்ட வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. தற்போது நிலவும் வெப்பமான சூழ்நிலையில் உடல்கள் விரைவாக அழுகும் நிலையில் இருக்கின்றன. இதனால் சட்டப்படி, உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக மாநில அரசு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில் விபத்தில் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்திருப்பதாகவும், 182 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.