நியூயார்க்: நாட்டில் எந்தப் பிரச்சினை நிகழ்ந்தாலும் அதற்கு காங்கிரஸ் மீது பாஜக பழி சொல்லும். ஒடிசா ரயில் விபத்தைப் பற்றிக் கேளுங்கள், 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி என்று காரணம் சொல்வார்கள்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியதாவது:
பாஜகவாக இருக்கட்டும் ஆர்எஸ்எஸ்ஸாக இருக்கட்டும் அவர்களுக்கு வரலாற்றின் மீது பழி சொல்வதே வழக்கம்.
காங்கிரஸ் ஆட்சியின்போதும் ஒரு விபத்து நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீது பழி போடவில்லை. எங்கள் ரயில்வே அமைச்சர், விபத்துக்கு நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று கூறி ராஜினாமா செய்தார். ஆனால் இப்போது அங்குள்ள அரசிடம் என்ன பிரச்சினையென்றால் உண்மையை எதிர்கொள்ளவும் ஒப்புக்கொள்ளவும் மாட்டாது சாக்குபோக்கு கூறுகின்றனர்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி யாராக இருந்தாலும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலங்களையே குறை சொல்வது வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னொருவர் மீது பழிபோட்டுவிட்டு தப்பிப்பதையே வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.
நவீன இந்தியாவை உருவாக்கியதில் என்.ஆர்.ஐ.-க்கள் பங்கு முக்கியமானது. மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் என்.ஆர்.ஐ.கள்தான். பல்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருந்தபோதும் அவர்கள் தேசத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இதனைத்தான் இந்திய சமூகத்திடமும் நான் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ட்விட்டரில் விமர்சனம்: முன்னதாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இதுவரை இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.