புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து பற்றி தேசிய பேரிடர் மீட்பு படைக்கு (என்டிஆர்எப்) முதலில் தகவல் தெரிவித்தவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த என்டிஆர்எப் வீரர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி அன்று மாலை 7 மணியளவில், தவறான பாதையில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து அருகில் இருந்த தண்டவாளங்களில் விழுந்தன. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயிலும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் மோதி தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பி-7 ரயில் பெட்டியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர் வெங்கடேஷ்(39) என்பவர் விடுப்பில் சென்னைக்கு பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்த மூன்றாம் வகுப்பு ஏ.சி பெட்டி தடம் புரண்டாலும் மற்ற பெட்டியுடன் மோதவில்லை.
வாட்ஸ்அப்பில் படங்கள்: இவர் விபத்து குறித்து தான் பணியாற்றும் கொல்கத்தா பட்டாலியன் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் என்டிஆர்எப் கட்டுப்பாட்டு அறைக்கும், விபத்து படங்கள் மற்றும் இருப்பிடம் பற்றிய விவரத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். இத்தகவல் அடிப் படையில் என்டிஆர்எப் முதல் குழு ரயில் விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.
இது குறித்து சென்னை வந்த நிவாரண ரயிலில் பயணம் செய்த என்டிஆர்எப் வீரர் வெங்கடேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரயிலில் பயணித்த போது திடீரென பயங்கர அதிர்வு ஏற்பட்டது. எனது பெட்டியில் பயணம்செய்தவர்கள் கீழே விழுவதை பார்த்தேன்.
ரயில் விபத்து பற்றியதகவலை மேல் அதிகாரிகளுக்கும், என்டிஆர்எப் கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவித்தேன். கீழே விழுந்த ஒருவரை வெளியே கொண்டு வந்து தண்டவாளத்துக்கு அருகே உள்ள கடையில் அமரவைத்தேன்.
அதன்பின் மற்றவர்களுக்கு உதவ சென்றேன். விபத்து நடந்த பகுதியில் உள்ள மருந்துக் கடை உரிமையாளரும், உள்ளூர் மக்களும், ரயில் விபத்தில் காயம் அடைந்த பலரை காப்பாற்றினர். இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.
கடமை உணர்வு: என்டிஆர்எப் டிஐஜி மோசென் ஷாஹேதி கூறுகையில், ‘‘சீருடையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்டிஆர்எப் வீரர் எப்போதும் கடமையை செய்கிறார். விபத்து நடந்த ஒரு மணி நேரத் துக்குள் என்டிஆர்எப்-ன் முதல் குழு மற்றும் ஒடிசா மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்றுவிட்டன. ஆபத்தான நிலையில் இருந்த பல பயணிகளுக்கு, தங்களால் முடிந்த உதவியை சரியான நேரத்தில் என்டிஆர்எப் குழுவினர் செய்து பலரது உயிரை காப்பாற்றினர்’’ என்றார்.