புதுடெல்லி: ஒடிசா வழித் தடத்தில் செல்லும் ரயில்களில் கவச் பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
ரயில்வே லெவல் கிராசிங்குகள் அனைத்தையும் ஆள் உள்ளதாக மாற்றுதல், விபத்து பாதிப்புகளை குறைக்கும் எல்எச்பி பெட்டி என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மத்தியபாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அங்கமான டிஆர்டிஓ அமைப்பு, ரயில் மோதல்களை தவிர்ப்பதற்கான கவச் என்ற அதிநவீன மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்கிஉள்ளது.
ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றாலோ, சிக்னலை மீறி சென்றாலோ தானியங்கி முறையில் தாமாகவே பிரேக் போட்டு ரயிலைநிறுத்துவதே கவச் தொழில்நுட்பமாகும். இந்த கவச் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாட்டில் இயக்கப்படும் பல்வேறு ரயில்களில் இந்த கவச் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஒடிசாவின் பாலசோர் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இதுகுறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறும்போது, “இந்தத் தடத்தில் செல்லும் ரயில்களில் இதுவரை கவச் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்படவில்லை. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன’’ என்றார்.