பாலசோர்: ஒடிசாவில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் அயராது மறுசீரமைப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.
7-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரயில்கள், 3 முதல் 4 ரயில்வே மற்றும் சாலை கிரேன்கள் இந்த பணியில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளன. விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகள் இந்த இயந்திரங்களின் உதவியுடன் ரயில் தடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
“சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் தொய்வு ஏற்படாத வகையில் போதுமான வெளிச்சம் இருக்கும் வகையில் விளக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புக் குழு களத்தில் பணிகளை முடிக்க அயராது பணி செய்து வருகின்றனர்” என ரயில்வே அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.