கோர்பா: சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரின் தோதிபாரா, 17-வது வார்டு பகுதியில் ஹஸ்தியோ இடது கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மீது 40 ஆண்டுகளுக்கு முன் 5 அடி அகலமும் சுமார் 70 அடி நீளமும் கொண்ட இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த இரும்பு பாலம் 10 டன்னுக்கு மேல் எடை கொண்டது.
கடந்த 18-ம் தேதி காலையில் வழக்கம்போல் எழுந்த அப்பகுதி மக்கள் பாலத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கவுன்சிலர் லட்சுமண் னிவாஸ் அளித்த புகாரின் பேரில் சவுக்கி பகுதி போலீஸார் சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தினர்.
இதில் 15 பேர் கொண்ட கும்பல், காஸ் கட்டர்களை பயன்படுத்தி இரவோடு இரவாக பாலத்தை வெட்டி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இந்த வழக்கில் 15 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களில் 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 10 பேரை தேடி வருகின்றனர். விசாரணையில் பழைய இரும்பு விலைக்கு விற்க பாலத்தை திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
காவல் நிலைய அதிகாரி பீம்சென் யாதவ் கூறுகையில், “கால்வாய்க்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 7 டன் இரும்பை பறிமுதல் செய்துள்ளோம். இரும்பை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இரும்பு எங்கு விற்கப்பட்டது என்று விசாரிக்கிறோம்’’ என்றார்.