புதுடெல்லி: தங்களது பணியாளர்கள் மீதான அழுத்தத்தை போக்கும் வகையில் 10 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்க்கும் திட்டத்தை ஜெப்டோ, சோமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக விரைவு டெலிவரி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், 10 நிமிடங்களில் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் வாடிக்கையாளர்களிடையே மிக பிரபலமாக உள்ளது.
ஆனால், இந்த திட்டம் டெலிவரி சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும் உருவாக்குவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கண்டித்திருந்தார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக பிளிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது, 10 நிமிட டெலிவரி வாக்குறுதி திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் 10 நிமிட வாக்குறுதி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன. பிளிங்கிட் நிறுவனம் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கெனவே தனது விளம்பரங்களில் இருந்து 10 நிமிட டெலிவரி வாக்குறுதியை நீக்கிவிட்டது. வரும் நாட்களில் மற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைக் கோரி தற்காலிகப் பணியாளர்கள் பல நாட்களாகப் போராடி வந்த நிலையில் நிறுவனங்களின் இந்த முக்கிய அறிவிப்பு வெளி வந்து உள்ளது. 10 நிமிட டெலிவரி வாக்குறு தியை குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதற்கு டெலிவரி தொழிலாளர்கள் சங்கம் நேற்று வரவேற்பு தெரிவித்துள்ளது.