புதுடெல்லி: அல் பலா பல்கலைக்கழகத்தில் இருந்து 3 காஷ்மீரிகள் உட்பட 10 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் டெல்லி, ஹரியானா மற்றும் ஜம்மு-ஷாமீர் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு ஹரியானா பரிதாபாத்தின் அல் பலா பல்கலைக்கழகம் விசாரணை அமைப்புகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் டெல்லி, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் போலீஸாருடன் தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இதில், பல்கலை.யில் பணியாற்றுபவர், மாணவர் என 10-க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இவர்களில் 3 காஷ்மீரிகளும் அடக்கம். இவர்களது கைப்பேசிகள் அனைத்தும் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலைமறைவானவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்களில் பலர் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களில் பொது மருத்துவத் துறையில் பணியாற்றி வந்த மருத்துவர் நிஸார் டெல்லி கார் குண்டு வெடிப்பிற்கு காரணமான உமருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நடத்திய வகுப்புகளில் 10 எம்பிபிஎஸ் மாணவர்களும் என்ஐஏவின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இவர்களது கைப்பேசிகளை என்ஐஏ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
மேலும் தீவிரவாத செயலில் தொடர்பு இல்லாத பலர் அல் பலா மருத்துவக் கல்லூரியிலிருந்து விலகி வேறு நிறுவனங்களில் இணைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அல் பலா கல்லூரியில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளிகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அல் பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்த அமலாக்கத்துறை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த கல்வி நிறுவனம் மாணவர்களை தவறாக வழிநடத்தி உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2014-15 முதல் 2024-25 வரையில் இப்பல்கலைக்கழகம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது. வருமான வரி தாக்கலின்படி, 2014-15 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் முறையே ரூ.30.89 கோடி மற்றும் ரூ.29.48 கோடி தன்னார்வ பங்களிப்புகளாகக் காட்டப்பட்டுள்ளன.
இதேபோன்ற அதிகத் தொகையை 2016-17-க்குப் பிறகு இது நேரடியாக வருமானமாகவும், கல்வி வருவாயாகவும் காட்டத் துவங்கி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.415.10 கோடி. உண்மையில் அப்பல்கலை.யின் வருமானம் அதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பிற்கு பின் டெல்லி காவல்துறையின் வழக்குப்பதிவிலிருந்து அமலாக்கத்துறை தன் விசாரணையைத் துவக்கியது. இப்போது, அல் பலா மீது பணமோசடி கோணத்திலும் விசாரித்து வருகிறது. முக்கியமாக வேந்தர் ஜாவத்துக்கு அரபு நாடுகள் பலவற்றுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்துள்ளன. இதன் பின்னணி என்ன என்பது குறித்தும் என்ஐஏ விசாரித்து வருகிறது.
இதனிடையே, இந்தியாவின் சமூக வலைதளங்களில் தீவிரவாதம் பரப்பும் பல்வேறு வகையான காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை கடந்த இரண்டு நாட்களாக என்ஐஏ கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த காட்சிகளில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச்,ரஜோவ்ரி உள்ளிட்ட மாவட்டங்களின் இளைஞர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பதிவுகள் அனைத்தும் துபாய், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.