மச்சுவாடி பகுதியில் காணப்படும் குரங்குகள். (அடுத்தப்படம்) திருவரங்குளத்தில் கிராம பகுதிக்குள் புகுந்து காயமடைந்த மான்.

 
சுற்றுச்சூழல்

காடுகளில் வாழ்விடச் சூழல் பாதிப்பு? - புதுக்கோட்டையில் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் விலங்குகள்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகளில் வனவிலங்குகள் வாழ்வதற்கான சூழல் படிப்படியாக அழிந்து வருவதால், தப்பிப்பிழைக்க வழி தேடி விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 8 மான்கள் கூட்டமாக தஞ்சமடைந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், அந்த மான்களை மெதுவாக விரட்டிச் சென்று அருகில் உள்ள ஆவணத்தான்கோட்டை காட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்.

இதேபோல, அரிமளம், அன்னவாசல், திருவரங்குளம், வம்பன் என மாவட்டம் முழுவதுமே இதுதான் நிலைமை. தாகத்துடன் காட்டை விட்டு வெளியேறும் மான்களை தெரு நாய்கள் விரட்டுவதும், வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாவதும், பாழடைந்த கிணறுகளில் தவறி விழுவதும் அன்றாட நிகழ்வுக ளாகிவிட்டன.

மற்றொரு பக்கம், குரங்குகள் கூட்டமாக வந்து குடியிருப்பு பகுதிகளிலேயே முகாம்போட்டு தங்கிவிட்டன. இதனால், வனவிலங்குகள் வாழ்வதற்கான வாழ்வியலை புதுக்கோட்டை காடுகள் இழந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, மரம் ஆர்வலர் தங்க.கண்ணன் ஆகியோர் கூறியது: மாவட்டத்தில் பெரும்பாலான காடுகள் வனத்துறையை விட வனத்தோட்டக் கழகத்தின் வசமே உள்ளன. காடுகளில் இருந்த பழ மரங்கள் அழிக்கப்பட்டு விலங்குகளுக்கு எந்தப் பயனும் இல்லாத யூகலிப்டஸ் மரங்கள் அதிகளவில் நட்டப்பட்டன. நீர்வரத்து பாதைகளும் அடைபட்டுப்போனதால் வனவிலங்குகள் கடும் தாகத்தால் தவிக்கின்றன. வணிக நோக்கில் மட்டுமே செயல்படும் வனத் தோட்டக் கழகம் வனவிலங்குகளை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இதேநிலை நீடித்தால், காடுகளில் விலங்குகளே இல்லாத நிலை உருவாகும் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கணேச லிங்கம் கூறியது: மாவட்டத்தில் வனத்துறையிடம் 7,332 ஏக்கரும், வனத் தோட்டக் கழகத்திடம் 46,890 ஏக்கரும் உள்ளன. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்காக காடுகளுக்குள் தடுப்பணைகள் கட்டப்பட்டு, தொட்டிகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. காடுகளில் மான்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

குரங்குகளைப் பொறுத்தவரை, மனிதர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுப் பழகிவிட்டதால், அவை காடுகளுக்குத் திரும்பாமல் உணவு கிடைக்கும் இடங்களிலேயே தங்கிவிட்டன. அவற்றை அடர் வனங்களில் விடுவதற்கு அரசு அனுமதி அளித்தால் அதைச் செய்யலாம். மேலும், மாவட் டத்தில் வனவிலங்குகள் வேட்டையாடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT