கெலவரப்பள்ளி அணை
ஓசூர்: கெலவரப்பள்ளி அணை நீர் மாசு குறித்து ஆய்வு மேற்கொண்ட தனியார் நிறுவனம் தமிழக பகுதிக்குள் தென்பெண்ணை ஆறு நுழையும் பகுதியில் ஆக்சிஜன் அளவு சரிந்துள்ளதாகவும், தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் நேரடியாகக் கலப்பதால் கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ‘பயோசின்க் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாக்ஷாயணி எஸ். தளவாய் தலைமையிலான நிபுணர் குழுவினர், கெலவரப்பள்ளி அணை மற்றும் கர்நாடக எல்லையையொட்டிய சொக்கரசனப்பள்ளி பகுதிகளில் நவீன பரிசோதனைக் கருவிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் தாக்ஷாயணி எஸ். தளவாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கெலவரப்பள்ளி அணையின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் உவர்ப்புத் தன்மை 485 முதல் 491 பிபிஎம் வரையிலும், அமிலத்தன்மை நடுநிலை அளவான 7 ஆகவும் பதிவாகியுள்ளது. ஆனால், கர்நாடக எல்லை வழியாக தமிழகத்துக்குள் நீர் நுழையும் பிரதானப் பகுதியில் ஆய்வு செய்தபோது, நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு 0.1 முதல் 0.2 வரை மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. சுத்தமான நீர்நிலையில் இயல்பாக 7 முதல் 9 வரை இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு, இங்கு மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.
இது இயற்கையான ஆற்று நீர் அல்ல; சுத்திகரிக்கப்படாத கழிவுநீரே அணைக்குள் நுழைகிறது என்பதைக் காட்டுகிறது. கழிவுநீரில் கலக்கும் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரேட் ரசாயனங்கள் காரணமாக நீர்நிலைகளில் அதிக அளவில் ரசாயன நுரை உருவாவதுடன், ஆகாயத்தாமரையும் அடர்ந்து படர்கிறது. இந்நீரை நம்பிப் பாசனம் மேற்கொள்ளும் விவசாய நிலங்களில் இந்த நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
அருகிலுள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளிலும் இந்நீர் ஊடுருவுவதால் நிலத்தடி நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நீரைக் கையாளும் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடுமையான தோல் நோய்கள் ஏற்படுவதுடன், கால்நடைகள் குடிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. மேலும், நீரில் உள்ள நச்சுப் பொருட்கள் உணவுச் சங்கிலி வழியாக மனிதர்களைச் சென்றடைவதால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்குத் தீர்வாகப் பெரும் செலவில் வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து பராமரிக்க வேண்டியதில்லை.
மாறாக, நீர் இயற்கையாகப் பாயும் புவியீர்ப்பு விசை முறையிலேயே, எல்லை நுழைவுப் பகுதியிலேயே ‘இன்-லைன்’ அறிவியல் தொழில்நுட்ப அமைப்புகளை நிறுவி கழிவுநீரைச் சுத்திகரிக்க முடியும். இத்தகைய தொழில்நுட்பம் ஏற்கெனவே வட இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா படுகைகளிலும், குஜராத் மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் இணைந்து உறுதியான முடிவெடுத்தால், 1 முதல் 2 மாதங்களுக்குள் நிரந்தரத் தீர்வு காண முடியும்.
தமிழக, கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டு ஆலோசனை மேற்கொண்டு, இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இதற்கான முழுமையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.