கொள்ளுக்குடிப்பட்டியில் கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டிய மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்.

 
சுற்றுச்சூழல்

திருப்பத்தூர் அருகே 54 ஆண்டுகளாக பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக கடந்த 54 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி, வனத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிய கொள்ளுக்குடிபட்டி, சின்ன கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிமாநிலங்கள், ஆசியாவின் பிற நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன.

அவை இங்குள்ள மரங்களில் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன. மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தங்களது பகுதிகளுக்கு திரும்பிச் செல்கின்றன.

இந்த பறவைகளுக்காக கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி மக்கள் கடந்த 54 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களில் பட்டாசு வெடிப்பதில்லை. பறவைகளுக்காக இக்கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை விட்டுத் தருகின்றனர். இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் வனத் துறையினர் கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுகின்றனர்.

அதன்படி, இரு கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் நேற்று இனிப்புகளை வழங்கி பாராட்டினார். வனச்சரக அலுவலர் சிக்கந்தர் பாட்ஷா, வனவர் பிரவீன்ராஜ், வனக் காப்பாளர் ஞானசேகரன், வனக் காவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, சரணாலயத்தின் பெரும் பகுதி கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் இருப்பதால், சரணாலயத்தை கொள்ளுக்குடிப்பட்டி சரணாலயம் என மாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டனர். கிராம மக்களின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT