புதுடெல்லி: வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் குடிப்பதைவிட அதிக தண்ணீர் தேவைப்படலாம் என ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. பல்கலைக்கழகத்தின் தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்துக்கான நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏஐ என்பது வெறும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமல்ல. இது தரவு மையங்கள், மேம்பட்ட கணினி சில்லுகள், குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றின் பரந்த அளவிலான இயற்பியல் வலைப்பின்னலைச் சார்ந்துள்ளது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வரும் 2030-ம் ஆண்டு இறுதிக்குள் ஏஐயின் அதிவேக வளர்ச்சி, வரலாறு காணாத அளவில் தண்ணீர் நுகர்வு, மின்சார தேவை மற்றும் நிலப் பயன்பாடு ஆகியவற்றை அதிகரிக்கக் கூடும்.
ஏஐ அமைப்புகளை இயக்கும் தரவு மையங்களுக்கான தண்ணீர் தேவை 2030-க்குள் 130 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் தண்ணீர் அளவை மிஞ்சக்கூடும்.
மேலும், ஏஐ சார்ந்த தரவு மையங்கள் 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 945 டெராவாட் மணி நேர மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடும். இது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த வருடாந்திர மின்சாரப் பயன்பாட்டை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்.
ஏஐ வளர்ச்சியை நிறுத்த முடியாது. அதற்குப் பதில் புதுமைகளைப் படைப்பதுடன் தண்ணீர், நிலம் மற்றும் ஆற்றல் மீதான தாக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.