உடுமலை: விவசாயப் பணிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கத்தை குறைத்து, சூழலுக்கு உகந்த மூங்கில் பொருட்களுக்கு விவசாயிகள் மீண்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உடுமலை மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், விதை தூவுதல், விளைபொருட்களை சேகரித்தல், தானியங்களை சுத்தப்படுத்துதல் மற்றும் தக்காளி பழங்களை சந்தைக்குக் கொண்டு செல்லுதல் போன்ற வேளாண் தேவைகளுக்கு மூங்கில் கூடைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சமீபகாலமாக பிளாஸ்டிக் பெட்டிகள் மற்றும் நெகிழிப் பொருட்களின் வரவால் மூங்கில் கூடைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்தது.
இதனால், பாரம்பரியமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இச்சவால்களுக்கு இடையிலும், தொழிலை கைவிடாத உடுமலை கைவினைஞர்கள், தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப புதிய கலைப் பொருட்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மூங்கில் தொழிலாளர்கள் கூறியதாவது: கூடைகள் தயாரிக்க தேவையான மூங்கில்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும், கண்காட்சிகள் மற்றும்
வணிக வளாகங்களில் விற்பனை செய்யவும் அரசு தனியாக கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டிற்கு மாற்றாக விவசாயிகள் மீண்டும் மூங்கில் கூடைகளை பயன்படுத்த முன்வந்தால் மட்டுமே எங்கள் பாரம்பரிய தொழிலும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.