திருப்பதி: திருப்பதி அருகே மின்சார வேலியில் சிக்கி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
திருப்பதியை அடுத்துள்ள பாகராப்பேட்டை வனப்பகுதியில் யானைகள் அதிகமாக உள்ளன. இந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சாய்பாலபல்லி எனும் கிராமத்தில் ஷேக் அக்தர், ஷேக் சமீர் ஆகியோர் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர்.
வேர்க் கடலை பயிரை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்க இவர்கள் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வேலியில் நேற்று முன்தினம் இரவு 2 யானைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.
தகவலின் பேரில் திருப்பதி மாவட்ட வனத்துறை அதிகாரி சாய்பாபா மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஷேக் அக்தர், ஷேக் சமீர் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.