சுற்றுச்சூழல்

சாட்ஜிபிடி 80ஸ் ட்ரெண்ட் படங்களும், சூழலியல் தாக்கமும் - ஓர் அலர்ட் பார்வை

பாரதி ஆனந்த்

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எதைத் திறந்தாலும் பயனர்களின் 80ஸ் ட்ரெண்ட் புகைப்படங்கள் தான் நிரம்பிக் கிடக்கின்றன. ஜென்ஸீக்கள் மட்டுமல்ல, 80-களில் பிறந்த மில்லனியல்களும் தங்களை ட்ரெண்ட் கேமில் இணைத்துக் கொண்டு குதூகலிக்கின்றனர். மகிழ்ச்சியோ, வெறுப்போ அல்லது பச்சாதபமோ இப்போதெல்லம் கும்பல் மனப்பான்மையாகத்தான் பிரதிபலிக்கப்படுகின்றன.

80ஸ் ட்ரெண்ட் புகைப்படங்கள் ஒருபுறம் ட்ரெண்டாகிக் கொண்டிருக்க, அவற்றை ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானோர் உருவாக்குவதால் பின்னணியில் உள்ள மின்சாரப் பயன்பாடு, தண்​ணீர் நுகர்​வு பற்றிய விமர்சனங்களும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாகவே ஏஐ தொழில்நுட்பதின் பின்னணியில் தண்ணீர் நுகர்​வு சிக்கல் இருப்பது பற்றிய வாத, விவாதங்கள் இருக்கும்போது 80ஸ் ட்ரெண்ட் புகைப்படத்தை மட்டும் குறிப்பிட்டு விவாதிக்கத் தேவையில்லை என்ற கருத்துகளும் ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது.

இதை நாம் அலசும் முன்னர் நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்துக்கான ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக நிறுவனம் UNU-INWEH (United Nations University Institute for Water, Environment and Health) அண்மையில், வெளியிட்ட அறிக்கையின் சாராம்சத்தை பற்றித் தெரிந்து கொள்வோம்.

“ஏஐ என்​பது வெறும் டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் மட்​டுமல்ல. இது தரவு மையங்​கள், மேம்​பட்ட கணினி சில்​லுகள், குளிரூட்​டும் அமைப்​பு​கள் மற்​றும் ஆற்​றல் உள்​கட்டமைப்பு​கள் ஆகிய​வற்​றின் பரந்த அளவி​லான இயற்பியல் வலைப்​பின்​னலைச் சார்ந்​துள்​ளது. இவை அனைத்​தும் சுற்​றுச்​சூழலில் குறிப்​பிடத்​தக்க பாதிப்புகளை ஏற்​படுத்​துகின்​றன.

குறிப்​பாக, வரும் 2030-ம் ஆண்டு இறு​திக்​குள் ஏஐ-யின் அதிவேக வளர்ச்​சி, வரலாறு காணாத அளவில் தண்​ணீர் நுகர்​வு, மின்​சார தேவை மற்​றும் நிலப் பயன்​பாடு ஆகியவற்றை அதி​கரிக்​கக் கூடும். ஏஐ அமைப்​பு​களை இயக்​கும் தரவு மையங்​களுக்கான தண்ணீர் தேவை 2030-க்​குள் 130 கோடி இந்​தி​யர்​கள் பயன்படுத்தும் தண்​ணீர் அளவை மிஞ்சக்கூடும்” என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

இப்போது மீண்டும் சாட்ஜிபிடியின் 80ஸ் ட்ரெண்டுக்கு வருவோம்.

ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும்..

கடந்த ஆண்டு சாட்ஜிபிடியில் கிபிலி பாணி ஏஐ படங்கள் (Ghibli studio trend) இதேபோல் பிரபலமானது. அது எல்லை கடந்தபோது ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் பயனர்களிடம் ‘போதும் நிறுத்துங்கள்’ என்று கோரிக்கை வைக்க வேண்டியதாயிற்று. அதன் பின்னர் ஜெமினியின் ஏஐ நானோ பனானா படங்கள் ட்ரெண்டாகின. அப்போது புகைப்படங்களை இவ்வாறாக பதிவேற்றுவதால் நமது தனிப்பட்ட அடையாளங்களை நாம் பொதுவெளிக்கு கசியவிடுகிறோம் என்ற எச்சரிக்கைகள் வலுத்தன. இப்போது மீண்டும் சாட்ஜிபிடியில் 80ஸ் படங்கள் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

ட்ரெண்டில் நாம் நம்மை ஐக்கியமாக்கி, ப்ராம்ப்ட்களை கொடுத்தால் இதுபோன்ற ட்ரெண்ட் படங்கள் ஒரு சில விநாடிகளில் நமது கைப்பேசியில் கிடைத்துவிடும், ஆனால், அதன் பின்னணியில் தரவு மையங்​களில் (டேட்டா சென்டர்கள்) என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டியது நம் பொறுப்பு.

தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) சக்திவாய்ந்த ப்ராசஸர்களை பயன்படுத்தி இயங்குகின்றன. இப்போதைய ட்ரெண்ட் படங்களைப் போல் பயனர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை அனுப்பும்போது தரவு மையங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தி வெப்பத்தை வெளியிட நேர்கிறது. அந்தச் சூழலில் டேட்டா மையங்களை குளிரூட்டும் கட்டமைப்புக்கான தேவை அதிகரிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கார்னகி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் ஹக்கிங் ஃபேஸ் நிறுவனம் இது தொடர்பாக மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஏஐ படம் ஒன்றை உருவாக்க, அதற்காகப் பயன்படுத்தப்படும் கணினி மற்றும் பட உருவாக்க முறையைப் பொறுத்து, 0.01 முதல் 0.29 கிலோவாட் மின்சாரம் தேவைப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்துக்கு இது மிகவும் சொற்பமானதாகத் தோன்றலாம். ஆனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பயனர்கள் பல பதிப்புகளை உருவாக்கும்போதும் மின்சார பயன்பாட்டின் அளவு மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

அதேபோல், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) மேற்கொண்ட ஆய்வில், 2022-ம் ஆண்டு இறுதியில் தரவு மையங்களின் (டேட்டா சென்டர்களின்) மின்சாரத் தேவை 2,688 மெகா வாட்டாக இருந்த நிலையில், 2023-ல் அது 5,341 மெகா வாட்டாக உயர்ந்துள்ளதாக கணித்தது. இப்போது 2026-ல் அதன் தேவை என்ன அளவில் இருக்கும் என்பதைக் கணக்கிட்டால் அது அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

மின்சாரம் ஒருபுறம், தண்ணீர் மறுபுறம்...

மின்சாரத் தேவை அதிகரிப்பு எச்சரிக்கையை கடத்தும் அதே வேளையில் தண்ணீர் நுகர்வு பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார நுகர்வை கணக்கிடுவது எளிது. ஆனால் டேட்டா சென்டர்களின் தண்ணீர் நுகர்வு கண்கூடாகத் தெரிவதில்லை என்பதால் அதன் வீரியம் பயனர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

இந்த நிலையில், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன்படி, சாட்ஜிபிடி-யுடன் சுமார் 20 முதல் 50 கேள்வி பதில்கள் கொண்ட ஓர் உரையாடலுக்கு சுமார் 500 மி.லி. தண்ணீர் பயன்படுத்தப்படுவதற்கு சமம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உரையாடலுக்கே இப்படியென்றால் நாம் உருவாக்கப் பணிக்கும் படங்களுக்கு என்னவென்று யோசிக்கையில் திகைப்பு ஏற்படுகிறது.

இருந்தாலும், இந்த புள்ளிவிவரம் இடம், குளிரூட்டும் தொழில்நுட்பம், மின்சார ஆதாரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், ஒவ்வொரு சாட்ஜிபிடி கோரிக்கைக்கும், இல்லை அதனிடம் கோரப்படும் இதுபோன்ற ட்ரெண்ட் படங்களுக்கும் பொதுவான, நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர் அளவு என்று எதுவும் இல்லை.

ஆயினும்கூட, ஏஐ சேவைகள் இயங்குவது இயற்பியல் உட்கட்டமைப்பை நம்பியே உள்ளது. அந்த உட்கட்டமைப்பை குளிர்விக்க கணிசமான நீர் ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்பது மறுப்பதற்கில்லை என்கின்றனர்.

மின்சாரப் பயன்பாடு, தண்ணீர் நுகர்வு ஆகியனவற்றை வைத்து மட்டுமே 80ஸ் ட்ரெண்ட் படங்களை ஒரு தனிப்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவாகக் கருதமுடியாது.

ஆனால், இது போன்ற ட்ரெண்டுகள் அடிக்கடி உருவாகி அது பயனர்களின் அன்றாட வழக்கமாக மாறும்போது விளைவுகள் பெரிதாக இருக்கும் என்பதே சூழலியல் செயற்பாட்டாளர்களின் அக்கறையும், கவலையும்.

“ஏஐ தொழில்நுட்பம் ஒரு வரம்தான். ஆராய்ச்சி, படைப்பாற்றலுக்கு அது பயனுள்ளதாக இருக்கக்கூடியதே. ஆனால் வைரல் ட்ரெண்டுகளுக்கு எல்லை வேண்டும். ஒரு வேலை இதுபோன்ற ட்ரெண்ட்கள் வேகமெடுக்கையில் அதற்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்தால் அழுத்தம் குறையலாம்” என்கின்றனர் நிபுணர்கள்.

கணினி, ஏஐ தொழில்நுட்பங்கள் மனிதர்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கிய வளம். இயற்கையோ, மனிதனால் உருவாக்கப்பட்ட வளமோ!, எதுவாக இருந்தாலும் எதன் மீதான அழுத்தம் சுரண்டல் தான். பொழுதுபோக்குக்காக ட்ரெண்டில் ஐக்கியமானாலும் கூட நம் புகைப்படங்களையும், தகவல்களையும் ஏஐ தொழில்நுட்பத்துக்கு தாரை வார்ப்பது, ஏஐ பயன்பாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மறைமுகமாக சுற்றுச்சூழலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவது போன்றவற்றில் நமக்கும் நாமே ஒரு கண்காணிப்பை வைத்துக் கொள்வது நலம்.

SCROLL FOR NEXT