சுற்றுச்சூழல்

ஸ்ரீவில்லி. மேகமலை புலிகள் காப்பகம் பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத்தீ

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகம் மாவூத்து மலைக்கு மேலே அடர்வனப் பகுதியில் பெருமாள் மொட்டை மலையில் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று (செப்.26) புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், மாலை பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத்தீ பரவியது. கோடை வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக மலை முழுவதும் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது.

புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு மலையேறிச் சென்றவர்கள் அனைவரும் அடிவாரம் திரும்பிவிட்டனரா என்பது உறுதியாக தெரியவில்லை.

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து பார்க்கும் போது மலையில் காட்டுத்தீ பற்றி எரிவது தெரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதால் வன உயிரின ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். வனத்துறையினர் மற்றும் காவலர்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT