கோடியக்கரை சரணாலய பகுதியில் அதிக அளவில் காணப்படும் கடற்காகங்கள்.

 
சுற்றுச்சூழல்

கோடியக்கரை நோக்கி படையெடுக்கும் கடற்காகங்கள்: காரைக்கால் அலையாத்திக் காடுகளும் களைகட்டுகிறது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்/ காரைக்கால்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு இந்த ஆண்டு சீசனையொட்டி மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான கடற்காகங்கள் வலசை வந்துள்ளன.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புகழ்பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வடதுருவப் பகுதிகளில் நிலவும் கடும் குளிரைத் தவிர்ப்பதற்காக அக்டோபர் முதல் மார்ச் வரை பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வலசை வருகின்றன.

இங்கு, 275-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பறவைகள் காணப்படுகின்றன. இந்த ஆண்டும் பல லட்சம் பறவைகள் கோடியக்கரையில் வந்து குவிந்துள்ளன. கோடியக்கரை சுற்றுவட்டார மரக்கிளைகளில் நிலப்பறவைகளும், சரணாலயப் பகுதிகளில் நீர்ப்பறவைகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

குறிப்பாக, கெம்பிலாஸ்ட் பம்பிங் நிலையம், கடற்கரை முனியப்பன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியப்பகுதிகளில் இருந்து வந்துள்ள கடற்காகங்கள் கடற்கரையில் குவிந்துள்ளன.

கோடியக்கரையில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகளை பின்தொடர்ந்து வரும் இவை, மீனவர்கள் வலைகளில் இருந்து வீசும் மீன்களை இரையாகப் பிடித்துச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. மேலும், சரணாலய பகுதிமுழுவதும் கடற்காகங்கள் அதிகளவில் காணப்படுகிறன.

இதேபோல, காரைக்கால் கடற்கரையையொட்டியுள்ள 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட அலையாத்தி காடுகளுக்கும் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. கோடியக்கரையை நோக்கி வலசை செல்லும் பறவைகள் வழியில் உள்ள காரைக்கால் அலையாத்தி காடுகளிலும் தங்கி ஓய்வெடுத்துச் செல்கின்றன.

கடந்த 2 வாரங்களாக சித்திர நாரை, பெரிய கொக்கு, மாட்டுக் கொக்கு, சிறிய நீர்க்காகம், ஊதாநிற நாரை, சாம்பல் நிற நாரை, மீன்கொத்தி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகைப் பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். அக்டோபர் இறுதி முதல் ஜனவரி வரை பறவைகளின் வரத்து இருக்கும் எனவும் அவர்கள் கூறினர். வலசை பறவைகளின் வருகை இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT