ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் அரிய வகை கடல் ஆமைகள் அடிக்கடி இறந்த நிலையில் கரை ஒதுங்குவது அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் ஒரே நாளில் மூன்று கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
1076 கிலோமீட்டர் நீளமுள்ள தமிழக கடற்கரை பகுதிகளான வங்காள விரிகுடா, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை. ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை, லெதர்பேக் ஆமை என ஐந்து வகையான கடல் ஆமைகள் காணப்படுகின்றன.
பெண் ஆமைகள் எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரைக்கே வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிடக் கூடிய வழக்கத்தைக் கொண்டது. தமிழகத்தில் அதிகளவில் ஆமைகள் மூட்டையிடுவதற்காக கரைக்கு வரும் பகுதிகளில் ராமேசுவரம் கடற்பகுதி முதன்மையானது.
அண்மைக்காலமாக ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில், ராமேசுவரம் அருகே சங்குகுமால் கடற்பகுதியில் ஒரே நாளில் இன்று மூன்று ஆலிவ் ரிட்லி எனும் சிற்றாமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது.
மேலும், கடலின் தூய்மை பணியை ஆமைகளும் செய்வதால் ஆமைகளுக்கு கடல் துப்புரவாளர்கள் என்ற பெயரும் உண்டு. பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன் பிடித்தல், கடலில் பிளாஸ்டிக் கலத்தல், படகுகளில் மோதி காயமடைதல் ஆகியவற்றால் ஆமைகள் பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன.
ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் ஆமைகள் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.