சுற்றுச்சூழல்

பாபநாசம் வட்டத்தில் ‘எல் நினோ’ தாக்கத்தால் சம்பா நாற்றுகள் சேதம்

குப்பையில் வீசிய விவசாயிகள்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கி உள்ளது. பாபநாசம் வட்டம் நரசிம்மபுரம், ராமசாமிகட்டளை, ஆதனூர், கூனஞ்சேரி, பட்டவர்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் பாய் நாற்றங்கால் மூலம் விதை தெளித்து சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

ஆழ்குழாய் மோட்டார் நீரைக் கொண்டு கடந்த மாதம் இறுதியில் பாய் நாற்றங்கால் அமைத்து விதை தெளித்துள்ள நிலையில், தற்போது 20 நாட்களான நாற்றுகள் அவிந்து சேதமடைந்த பல ஏக்கர் நடவு செய்வதற்கான நாற்றுகளை விவசாயிகள் பறித்து குப்பையில் வீசி எறிந்தனர்.

இதுதொடர்பாக விவசாயி சரபோஜி கூறியது: ஆகஸ்ட் மாத இறுதியில் ஆழ்குழாய் மின்மோட்டார் மூலம் சம்பா சாகுபடியை தொடங்கி நாற்றாங்காலில் பாத்தி கட்டி, பாய் நாற்றாங்காலில் 165 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய 1009 ரக விதை நெல் தெளித்து, அதன் மேல் வைக்கோல்களை போர்த்தி, நாள்தோறும் 2 அல்லது 3 முறை கையால் நீர்தெளித்து வந்தோம்.

ஆனால், அண்மைக்காலமாக எல் நினோ காரணமாக அதிகவெயிலின் தாக்கம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால், வைக்கோலால் போர்த்தப்பட்ட நாற்றுகள் அவிந்து சேதமாகிவிட்டன.

மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நாற்றுகளுக்கு நீர் பற்றாக்குறையாகி மஞ்சள் நிறமானது. இதை காப்பாற்ற பல்வேறு மருந்துகள் தெளித்தாலும் அந்த நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்தால், அந்த நெற்பயிர்கள் போதிய வளர்ச்சி இல்லாமல்,  பெரும்பாலான நெல்மணிகள் பதராகிவிடும். அதனால் செலவு செய்த தொகைகூட கிடைக்காது என்பதால் அவிந்து சேதமான நாற்றுகளை பறித்து குப்பையில் வீசி வருகிறோம்.

இதுவரை 5 ஏக்கர் வயலுக்குநடவு செய்வதற்காக விதைக்கப்பட்ட நாற்றங்காலுக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகி உள்ளது.  விவசாயிகளின் வாழ்வாதாரம் நெல் சாகுபடியாக இருப்பதால், பல லட்சம் செலவு செய்து, போதிய அளவில் விளைச்சல் இல்லாவிட்டால், வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

இதேபோல பல கிராமங்களில் பல ஏக்கர் நடவு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாய் நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் சேதமானதால் அவை குப்பையில் வீசப்பட்டுள்ளன.

தற்போது, 140 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய கோ 56 ரக நெல்லை மீண்டும் சாகுபடி செய்ய உள்ளோம். எனவே, தமிழக அரசு, சம்பா சாகுபடியை காப்பாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எல் நினோ தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT