கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலருடன் உயிரிழந்து கிடக்கும் ‘ரோலக்ஸ்’ யானை. | படம்: ஜெ.மனோகரன் |
கோவை: கோவையில் பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் பொருத்தி ஆனைமலை வனத்தில் விடப்பட்ட ‘ரோலக்ஸ்’ என்ற யானை நேற்று மர்மமாக உயிரிழந்தது.
கோவை துடியலூர் பகுதியில் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ‘ரோலக்ஸ்’ என அழைக்கப்பட்ட காட்டு யானை, வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது. ரேடியோ காலர் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், நேற்று அந்த யானை திடீரென உயிரிழந்தது.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் ஆகியார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரோலக்ஸ் என்ற ஆண் யானை, கோவை கோட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு, நவம்பர் 12-ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் மந்திரிமட்டத்தில் உள்ள பொருத்தமான வாழ்விடப் பகுதியில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு விடுவிக்கப்பட்டது.
அது நல்ல உணவு மற்றும் நீர் ஆதாரங்களைக் கொண்ட இடமாகும். விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து யானை அப்பகுதிகளில் நன்றாக மேய்ந்தும், தண்ணீர் அருந்தியும் வந்தது. கண்காணிப்புக் குழு யானை தொடர்பான வீடியோ மற்றும் அறிக்கைகளை அனுப்பியதன் மூலம் அதன் நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட்டது.
கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில், யானை தண்ணீர் குடிக்க அருகிலுள்ள ஒரு சிறிய நீர்நிலைக்கு சென்றது. அப்போது யானை தரையில் வழுக்கி கீழே விழுந்தது. கண்காணிப்பு குழுவினர் அருகில் சென்று பார்த்த போது யானை இறந்தது தெரியவந்தது.
வன கால்நடை மருத்துவர் வெண்ணிலா, உதவி கால்நடை மருத்துவர் கலைவாணன், மதுரை மற்றும் வால்பாறையை சேர்ந்த ஒரு கால்நடை மருத்துவர் ஆகியோர் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
மேலும், வன தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி வேணு பிரசாத், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனவிலங்கு) தலைமையில் ஒரு சுயாதீன உண்மை கண்டறியும் குழுவை தலைமை வனவிலங்கு காப்பாளர் அமைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.