போதிய மழையில்லாததால் அரூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் குறைந்து வேகமாக வறண்டு வருகிறது.
அரூர்: போதிய மழை இல்லாததால் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் கடந்த பருவமழை சீசனில் சராசரி மழையளவை விட (950 மி.மீ.) குறைவாகவே (சுமார் 700 மி.மீ.) மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
அரூர் பகுதியில் உள்ள வள்ளி மதுரை, வாணியாறு அணைகளுக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணை பாசனப் பகுதியில் விவசாயம் பாதிப்படையாத நிலை உள்ளது.
இருந்தபோதும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, ராமியம்பட்டி, கீழ்மொரப்பூர், மாம்பட்டி பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் இப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குட்டைகள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் 3.39 மீட்டர் என்ற அளவில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 5.24 மீட்டராக உள்ளது.
இதனால் அடுத்த சில வாரங்களுக்கு பின்னர் விவசாய நிலங்கள் தரிசுகளாக விடும் சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து ராமச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது: அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அடுத்த சில மாதங்களில் கிராமப் பகுதிகளில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது.
மேலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தீவனம் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் உருளைகளை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. கோடை வெயிலும் பிப்ரவரி தொடக்கத்திலேயே அதிகமாக உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அரூர் கோட்டப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பகுதிகள் குறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள் கணக்கெடுத்து உடனடியாக வாய்ப்புள்ள இடங்களில் போர்வெல் அமைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், குடிநீர் பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்கும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.